புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! 5 நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதையும் படியுங்கள் : கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஓ.பன்னீர் செல்வம்!
அந்த வகையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்தது. இதையடுத்து, மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 க்கும் விற்பனையானது. மார்ச் 7ம் தேதி ரூ.400 மற்றும் மார்ச் 8 ஆம் தேதி ரூ.120-ம் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையாகிறது.