For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை!

09:53 PM Jul 14, 2024 IST | Web Editor
மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை
Advertisement

ரயில் ஓட்டுநர்களுக்கு மதுரை ரயில்வே காலனியில் ரூ.5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது. 

Advertisement

ரயில்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் லோகோ பைலட்டுகள்,  உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஆவர்.  இவர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஓடும் தொழிலாளர்கள் (Running Staff) என
அழைக்கப்படுகின்றனர்.  இரவு, பகல் பாராமல் தொடர்ந்து தொலைதூர ரயில் நிலையங்களுக்கு ரயில்களை இயக்கும் இவர்களுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் அமைக்கப்படுகிறது.

அந்த வகையில், மதுரை ரயில்வே காலனியில் ரூ.5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது.  இந்த ஓய்வு அறைக்கு "ரயில் மரம் - ஓடும் தொழிலாளர்கள் கூடு" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த நவீன ஓய்வு அறை 977 சதுர அடி தரைதளமும், 740 சதுர அடி முதல் தளமுமாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு ஒருவருக்கு ஒரு அறை என்ற வகையில் 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, கட்டில் மெத்தை, மின் விளக்குகள், மின்
விசிறி, மேஜை, நாற்காலி, உடைமைகளை வைக்க தனி மேஜை, படிப்பதற்கான தனி மின்
விளக்கு, கண்ணாடி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் பெண் லோகோ பைலட்டுகளுக்கு மூன்று படுக்கைகள் கொண்ட இரண்டு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறையும்
ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 48 பேர் தங்கி ஓய்வெடுக்க
முடியும்.  இந்த நவீன ஓய்வு விடுதியில் சமையலறை, உணவு அருந்தும் அறை,
புத்தகங்கள் படிக்கும் அறை, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூடம்
ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வெளி பகுதியில் நடைப்பயிற்சிக்கு பசுமை பூங்காக்கள், உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.  இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் வகையிலும் இந்த ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு விடுதியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் பணி பயிற்சி செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  90% மானிய விலையில் சைவ, அசைவ உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு அறைக் காப்பாளர் 24 மணி நேரமும் ஓய்வு அறையில் தங்கியுள்ள ரயில் ஓட்டுநர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக அவர்களை ஓய்வில் இருந்து எழுப்பி குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க காப்பாளர் உதவுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு பிறகு உரிய ஓய்வெடுத்து மீண்டும் ரயில்களை பாதுகாப்பாக, குறித்த நேரத்தில் இயக்க இந்த நவீன ஓய்வு விடுதி உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement