தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - சென்னை மாநகராட்சி விளக்கம்!
சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,
"பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், நாய்கள் தொல்லை அதிகம் உள்ள இடங்களிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அவற்றிற்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் தெருநாய்கள் மூலம் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் நாய் இனக்கட்டுப்பாட்டு விதி 2023ன்படி அவைகள் மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையிலும், திரு.வி.க.நகர் மண்டலம் புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம் லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம் கண்ணம்மாபேட்டை சோழிங்கநல்லூர் மண்டலம் சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம்-மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் நாளொன்றுக்கு 10 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும், கூடுதலாக பெருநகர சென்னை மாநகராட்சியின் 1,2,3,4,5,7,8,11,12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தெருநாய்கள் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள். கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள். கருத்தடை அறுவை சிகிச்சையின் தரத்தினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள் மற்றும் நாய் பிடிக்கும் வலைகள் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1,80,157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66.285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தெருநாய்களைப் பிடித்தல். கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 180 லட்சம் தெருநாய்களுக்கும் ரூபாய் 3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜுன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் என 2 இலட்சம் நாய்களுக்கும் அதன் விவரங்கள் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்து மைக்ரோசிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்படும் இடங்கள் கருத்தடை செய்த நாள், விவரம், அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்ட விவரம், இதர சிகிச்சை விவரங்களும், செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை உரிமையாளர் விவரம் உரிமம் விவரம் ரேபிஸ் தடுப்பூசி, அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்ட விவரம் மற்றும் இதர சிகிச்சைகள் விவரம், கால்நடை மருத்துவர் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்து அதன் விவரங்கள் அடங்கிய மைக்ரோசிப் பொருத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல். கண்காணித்தல், நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தி அதன் வாயிலாக ரேபிஸ் நோய் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்தல் என முழுமையான கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், கோடம்பாக்கம் மண்டலம் கண்ணம்மாபேட்டையில் செல்லப் பிராணிகளுக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொடங்கப்படவுள்ளது".
செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:
"பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன் உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை (Rabies free Chennai) என்ற இலக்கினை அடையும் பொருட்டு, செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின் படி, செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் (Pet License) பெற்றிருக்க வேண்டும். இதற்காக நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களிலும், இணையதளம் வாயிலாகவும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50/- என்ற கட்டணத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்ட பிறகே நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் செல்லப்பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 9,883 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ள நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கும், இனக்கட்டுப்பாடு மைய ஊழியர்களுக்கும். செல்லப்பிராணிகள் சிகிச்சை மைய பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தன்று வெறிநாய்க்கடி நோய் தடுப்பு நடவடிக்கையாக, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.