சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் - நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். அதன்படி,
யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2025
அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025
ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025
உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் இந்த மசோதாக்கள் இக்கூட்டத் தொடரிலே நிறைவேற்றப்பட மாட்டாது. மாறாக இன்றைய தினம் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிவர்.
இதனைத் தொடர்ந்து மூன்று மசோதாக்களும் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மூன்று மசோதாக்களும் கடுமையான குற்றச் செயல்களில் பிரதமர், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், யூனியன் பிரதேச அமைச்சர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ பதவியில் இருந்து தகுதி நீக்கவும் செய்வதை தடுக்கிறது. எனவே இதில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாக்களில் திருத்தம் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.