புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நடைமுறையில் இருக்கும் 60 ஆண்டுகால வருமான வரி சட்டம் 1961ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கடந்தாண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து திருத்தங்கள் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவுக்கு பிப்ரவரி 7 மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் புதிய வருமான வரி மசோதாவை இன்று (பிப்.14) மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
1961ல் இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் 298 பிரிவுகள், 23 அத்தியாயங்கள் மற்றும் 14 அட்டவணைகளுடன் ஒப்பிடும்போது, 622 பக்கங்களுக்குள் 536 பிரிவுகள், 23 அத்தியாயங்கள் மற்றும் 16 அட்டவணைகளைக் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா கொண்டுள்ளது.
மேலும் இதில் மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. அதோடு வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டு புரியும் வகையில் அமைந்துள்ளன. தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய வருமான வரி மசோதா வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.