"ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்" - சீமான்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆவடி மாநகரின் 14, 21, 22 ( வார்டு) சிறகங்கள் அமைந்துள்ள கரியப்பா நகரில் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்கு குப்பைக் கிடங்கினை அமைக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
குப்பைக் கிடங்கு அமைக்கும் பகுதிகளுக்கு அருகில் 500மீ வரை குடியிருப்புகள் இருக்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால், அதனைக் காற்றில் பறக்கவிட்டு, ஆவடியில் லட்சுமி நகர் - கரியப்பா நகர் என மக்கள் நெருக்கமாக வசிக்கும் இரண்டு குடியிருப்புகள் அருகில் குப்பைக் கிடங்கு அமைக்க முயல்வது அப்பட்டமான விதிமீறலாகும். அதுமட்டுமின்றி, 15 அடி நீளம் உள்ள மழைநீர் கால்வாயை அழித்து, அக்கிடங்கு அமைக்கப்படுவது அதைவிடப் பெருங்கொடுமையாகும்.
பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள், வணிக தலங்கள், மக்கள் குடியிருப்புகள் அருகே உள்ள நிலையில் நிலத்தையும், நீரையும் நாசப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கும், மக்கள் நலனிற்கும் கேடு விளைவிக்கும் குப்பைக் கிடங்கை திமுக அரசு அங்கே அமைப்பது ஏன்? அரசுக்குச் சொந்தமான யாரும் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான பல இடங்கள் உள்ள நிலையில், அவற்றையெல்லாம் விடுத்து மக்கள் நெருக்கமான இடங்களிலேயே கழிவுநீர் சுத்திகரிக்கவும், குப்பைகளை எரிக்கவும் திமுக அரசு இடம் தேர்வு செய்வது ஏன்? திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், சென்னையில் கொடுங்கையூரிலும், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும் குப்பைகளை மலைபோல் கொட்டி அந்த இடங்களை வாழத்தகுதியற்ற பகுதியாக மாற்றியது போதாதா?
மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களை நகரத்திற்குப் பல கிமீ தூரத்திற்கு வெளியே ஆள் அரவமற்ற இடத்தில் வைக்கும் திராவிட மாடல் திமுக அரசு, கழிவுநீர் ஆலை, குப்பைக்கிடங்குகளை நகரின் மையப்பகுதியில் அமைக்கத் துடிப்பது ஏன்? நகரத்தை தூய்மை செய்வதே மக்கள் நலனை காப்பதற்குதானே? கழிவுகளை அகற்றுவது எந்த அளவிற்கு முதன்மையானதோ, அதே அளவிற்கு மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதும் முதன்மையானது அல்லவா? மக்கள் நலனைக் கெடுக்கும் வகையில் குப்பைக்கிடங்கை அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு, அதனை மக்கள் பயன்படுத்தாத பகுதியில் அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிராக ஆவடி மக்களைத் திரட்டி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.