சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம்... தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.
அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது சென்னை வேளச்சேரியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “சென்னை வேளச்சேரி பிரதான சாலை முதல் குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.