வங்கதேசத்தை பந்தாடிய நெதர்லாந்து! 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது நெதர்லாந்து அணி.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 68 ரன்களில் அவுட்டானார். வெஸ்லி பரேசி 41 ரன்னும், சைப்ரண்ட் 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக ஹசான் மிராஸ் 35 ரன்களும், மஹ்முதுள்ளா 20 ரன்களும், மஹெடி ஹாசன் 17 ரன்களும், தன்சித் ஹாசன் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். நஜ்முல், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் ஒற்றை இலக்கில் ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
வங்காளதேச அணி 37.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். தொடர்ந்து டஸ்கின் அகமத் 11 ரன்களும், முஸ்தஃபிசர் ரஹ்மான் 20 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இந்நிலையில், வங்காளதேசம் அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தனர்.