நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்!
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Deeply saddened by loss of lives and damage due to the earthquake in Nepal. India stands in solidarity with the people of Nepal and is ready to extend all possible assistance. Our thoughts are with the bereaved families and we wish the injured a quick recovery. @cmprachanda
— Narendra Modi (@narendramodi) November 4, 2023
'நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது, நேபாளத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.