நியோமேக்ஸ் மோசடி வழக்கு - மேலும் இரண்டு இயக்குநர்கள் கைது!
மதுரையில் ‘நியோமேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் மேலும் இரண்டு இயக்குநர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரையை தலைமையாக கொண்டு 'நியோமேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ், திருச்சி, தஞ்சை என பல இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.
இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும் இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் அவை இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதனால் பலர் பல கோடி ரூபாய்க்கு முதலீடுகளை செய்தனர். ஆனால் அந்நிறுவனத்தினர் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதனால் பலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் பலர் பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் புகாரின் பேரில் நிறுவனத்தை சேர்ந்த சிலர் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் இயக்குனர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினீல் விடுவிக்கப்பட்டார்.
இவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விருதுநகர் சேர்ந்த ரவிசங்கர், மற்றும் ராஜ்குமார் என்பவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவில் நீதிபதி, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன, இவற்றில் எவ்வளவு சொத்துக்களை முடக்க திட்டம் உள்ளது என்பது குறித்து போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் சிவகங்கை மாவட்டம் தாமறாக்கியை சேர்ந்த அசோக் மேத்தா மற்றும் டிரைடாஸ் பிராபர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மதிவாணன் ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.