நெல்லை மேயர் ராஜினாமா - ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!
நெல்லை மேயர் ராஜினாமா செய்ததையடுத்து ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார்.
நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் அளித்துள்ளார். இந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 16 வது வார்டு கவுன்சிலராக சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சரவணன் தேர்வு செய்யப்பட்டார்.
கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை, நெல்லை மேயர்கள் மீதான புகார் குறித்து அமைச்சர் கேஎன்.நேரு விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி இரு மேயர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியானது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி எம் சரவணன் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 34 இன் படி மாமன்ற தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். மேற்படி பதவி விலகல் கடிதம் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கும் பதிவிற்கும் வைப்பது தொடர்பான சிறப்பு கூட்டம் வருகின்ற 08.07.2024. திங்கள்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.