பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.
சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. இதையடுத்து சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
இதையடுத்து இன்று சென்னை தேனாம்பேட்டையில் 3-வது முறையாக மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறையின் சார்பில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனையடுத்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை முதல் (ஜன. 9) முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி என அறிவிக்கப்பட்டது. எனவே 100% பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்படுகிறது.
இதனால் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு இயக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்துத்துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், பேருந்துகள் இயக்கும் எனவும், மாற்று ஏற்பாட்டின்படி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.