#NEET வினாத்தாள் கசிவு - 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று தாக்கல் செய்தது. இதில் 21 பேர் குற்றம்சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது,
“ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள, ஒயாசிஸ் பள்ளியின் கட்டுப்பாட்டு அறையில் நீட் வினாத்தாள்கள் வைக்கப்பட்ட உடனேயே, அங்கு சென்று வினாத்தாளை பள்ளியின் முதல்வர் அஹ்சனுல் ஹேக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வினாத்தாள்களுக்கு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் 7 பேர் பதிலளித்துள்ளனர். அவை முறைகேடாக பணம் வழங்கிய தேர்வர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட பெரும்பாலான மருத்துவர்கள் சிபிஐயால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். பதிலுடன் கூடிய வினாத்தாள்களை பெற்ற தேர்வர்களை தேடும் பணியில் சிபிஐ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில் 21 பேரை குற்றம்சாட்டப்பட்ட நபர்களாக சேர்த்துள்ளது” என்றார்.