நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் நிலையில், முழுப்பெண் எடுத்த 6 மாணவர்களின் மதிப்பெண் குறையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) எழுதியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை
கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் "பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் அலக் பாண்டே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், நீட் தேர்வு முடிவுகளைத் திரும்பப் பெற்று மறுதேர்வு நடத்த வேண்டும் என அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹித்தின் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ‘என்சிஇஆர்டி’ பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் (கருணை) மதிப்பெண்கள் வழங்கப்பட்டன' என்று என்டிஏ விளக்கம் அளித்தது. தேர்வர்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து நீட் தேர்வர் ஜாரிபிதி கார்த்திக் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி, 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. மறுதேர்வில் பங்கேற்க விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவர்களுடைய இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படவுள்ளன.
அதேபோல் மறுதேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு அந்தத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மே 5-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண் நிராகரிக்கப்படுகிறது' என உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில், 720 க்கு 720 மதிப்பெண் எடுத்த 6 மாணவர்களுக்கு மதிப்பெண் குறையக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி 720க்கு 650 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சேர்க்கை பெற முடியும். குறிப்பாக 690 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால்தான் மிகப்பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
'இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) 0.001 சதவீதம் அளவு அலட்சியம் நடைபெற்றிருந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் நேற்று (18.06.2024) உத்தரவிட்டிருந்தது. தேர்வுக்குத் தயாராகும்போது மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், 'இந்த வழக்கை விரோதமாகக் கருதக் கூடாது' என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.