நீட் மறுதேர்வை எதிர்த்து குஜராத்தில் மாணவர்கள் போராட்டம்!
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் நீட் மறுதேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகின நிலையில், பல முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது.
நீட் நுழைவுத் தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதும் பிரச்னையாக உருவெடுத்தது.இதையடுத்து நடந்து முடிந்த நீட் தோ்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், 1,563 பேருக்கும் மறுதேர்வு இன்று(ஜூன் 23) நாடு முழுவதும் 7 மையங்களில் இன்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : “மருத்துவ படிப்பிற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நிரப்ப வேண்டும்” – டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்!
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் பகுதியில் நீட் இளங்கலை தேர்வு எழுதிய மாணவர்கள் நீட் மறுதேர்வு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு தேர்வு நடத்துவதால், முன்னதாக தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மாற்றம் ஏற்படும் என மாணவர்கள் நீட் மறுதேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவர் பாலக் கூறுகையில் :
"நீட் இளங்கலை தேர்வில் 682 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த மதிப்பெண்களை எடுத்துள்ளேன். நீட் மறு தேர்வுகள் கூடாது. நீட் மறு தேர்வு நடத்துவது எங்கள் எதிர்காலத்துடன் விளையாடுவது போன்றது"
இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.