நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு!
நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை துவங்கியது. தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று முதல் தொடங்க இருந்தது. இதில் பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கப்போவதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மனுவை விருதுநகர் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மின் அஞ்சல் மூலம் அனுப்ப முயன்றார். ஆனால், அந்த மின்னஞ்சல் செயல்படவில்லை. இது தொடர்பாக அவர் தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதே போல், மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனும், மின்னஞ்சல் மூலம் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அனுப்ப முடியாததால், கையால் எழுதி அனுப்பியதாக பதிவிட்டிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில், மக்களவை இன்று கூடியது. அவை கூடியவுடன் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். ஆனால், இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவாதம் நடத்த கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவையில் அமளி நிலவியது. இதனையடுத்து அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார்.
மேலும் மாநிலங்களவையிலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரினார். ஆனால், அவைத் தலைவர் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையும் நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவைக் கூடியவுடன், நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவையை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.