நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!
நீட் ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்றால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த தருண் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தருண் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வில் மாணவர் ஒருவர் ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத உதவியதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிசிஐடி இந்த வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி தரப்பில் அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டு கோபம் அடைந்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் ஏன் சிறப்பு குழு அமைக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும், “2019-ம் ஆண்டு இந்த வழக்கில் 5 ஆண்டுகளாக விசாரணைகள் தொய்வு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிபிசிஐடி விசாரணை சரியாக நடத்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என நீதிபதி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி புகழேந்தி தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் சிபிசிஐடி கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டதா? என கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு, “கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு விட்டது” என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, “ஒரு மாணவருக்காக 3 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களுடைய ஆதார் விவரங்கள் வழங்கப்பட்டதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்பொழுது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆதார் அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி, “ஏழை விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஆதார் அவசியம். ஆனால் மருத்துவக் கல்விக்கு தேர்வு எழுத வந்தவர்களுக்கு ஆதார் அவசியமில்லை. இதுதான் உங்களுடைய கொள்கை முடிவா. விவசாயிகளுக்கு மட்டும் தான் ஆதார் அவசியம் என உச்சநீதிமன்றம் உங்களிடம் தெரிவித்துள்ளதா?. தேர்வு எழுத வரும் மாணவர்களை அனைத்தும் சோதனையும் செய்யும் தேசிய தேர்வு முகமையிடம், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்வதற்கான போதிய தொழில்நுட்பங்கள் இல்லையா?
சிபிசிஐடி போலீசாரின் திறமையற்ற விசாரணையை தேசிய தேர்வு முகமை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. வழக்கு நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனக் கூறிய நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.