நீட் தேர்வு முறைகேடு - மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில், 23.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) வெளியானது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : சீமான் கையால் விருது வாங்கி அவரை மேடையிலேயே விமர்சித்த ஆவுடையப்பன் என்று பரவும் வீடியோ – உண்மை என்ன?
இந்நிலையில், இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பீகார் கார் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த பீகார் காவல்துறையினர், சிறப்புக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டனர். நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாட்னாவில் 4 தேர்வர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதாக பீகார் காவல்துறை நேற்று தெரிவித்தது.
இதேபோல நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா மாநில ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அரசுகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பிடித்த சம்பவங்கள் சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில, நீட் தேர்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹிதீன் ஆகியோர் தாக்கல் செய்தனர். முறைகேடு நடந்துள்ளதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.