“தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” - சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன், கேப்டன் சுப்மன் கில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“சுப்மன் கில் தற்போதுதான் கேப்டன் பதவியில் தனது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவரிடம் சிறப்பான கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. ஒரு கேப்டன் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். முன்னாள் கேப்டனான தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்.
எனவே, அவர் தோனியிடம் இருந்து அறிவுரைகளை கேட்டுப் பெறவேண்டும்; தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது.” என தெரிவித்துள்ளார்.