#ChessOlympiad | தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி!
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து, மகளிர் அணியும் முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில் 195 அணிகளும், பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்று இந்திய ஆடவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மகளிருக்கான 10வது சுற்றில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இதில் இந்தியா 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. மகளிர் அணியும் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டது. இந்நிலையில், இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர். வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.