திருச்செந்தூர் அருகே என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர் பதாகை கிழிப்பு!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டினத்தில், என்.டி.ஏ. கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பா.ஜ.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பதாகையை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கிழித்துச் சென்றுள்ளனர். பதாகையில் இருந்த குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் செய்தி பரவியதும், அப்பகுதியில் பா.ஜ.க.வினர் பெருமளவில் குவியத் தொடங்கினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்தாரங்கன் தலைமையில் பா.ஜ.க.வினர் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, காவல்துறையினர் பா.ஜ.க.வினருடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், பதாகையை கிழித்த மர்ம நபர்களைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் இடையே உள்ள மோதலின் விளைவாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என யூகங்கள் எழுந்துள்ளன.