"இந்தியாவில் பயணிகள் விமானங்களும் விரைவில் தயாரிக்கப்படும்" - குஜராத்தில் #PMModi பேச்சு!
குஜராத்தில் விமான உற்பத்தி ஆலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் பயணிகள் விமானங்களும் விரைவில் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது, ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருந்தார். இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு வேண்டிய சி-295 ரக போர் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது,
"எனது நண்பரும் ஸ்பெயின் பிரதமருமான பெட்ரோ சான்செஸ் முதல்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இந்தியா, ஸ்பெயின் இடையேயான உறவுக்கு புதிய பாதை ஏற்படுத்தியுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள ஆலையானது, இந்தியா - ஸ்பெயின் இடையேயான உறவை வலுப்படுத்துவதுடன், 'இந்தியாவில் தயாரிப்பு’ ‘உலகத்துக்கான தயாரிப்பு’ ஆகிய திட்டங்களை வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : “மதுரை #AIIMS 2026ல் செயல்படத் தொடங்கும்…” – மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்!
அண்மையில், நாட்டின் மிகச் சிறந்த மகனான ரத்தன் டாடாவை நாம் இழந்தோம். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். நான் குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது தொடங்கப்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலை மூலம், இன்று வெளிநாடுகளுக்கு ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல், இந்த ஆலையில் இருந்து வரும்காலங்களில் வெளிநாடுகளுக்கு விமானங்களை ஏற்றுமதி செய்யும் என்று நம்பிக்கை உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி அமைப்பில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான துறையில் வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டிருக்கிறீர்கள். வருங்காலத்தில் இந்தியாவிலேயே பயணிகள் விமானங்களும் தயாரிக்கப்படும். தற்போது, இந்திய விமான நிறுவனங்கள் 1,200 விமானங்கள் வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.