மக்களவையில் நேருவை விமர்சித்த நரேந்திர மோடி - காங்கிரஸ் பதிலடி!
மக்களவையில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். அப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.
முன்னாள் பிரதமர் நேரு, இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் அறிவாற்றல் குறைந்தவர்களாக நினைத்திருந்ததாக பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விவசாயிகளுக்கு எந்த உரிமையையும் கொடுக்காமல் காங்கிரஸ் வைத்திருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தேர்தல் 2024 - தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
இதையடுத்து, இடையூறுகள் வரும்போது நம்பிக்கையை இழந்து துவண்டு விடுவார்கள் என்று நாட்டு மக்களை குறைத்து மதிப்பிட்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், பிரதமரின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி மனக்குழப்பத்தில் இருப்பதால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் நேரு மீதான பிரதமரின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து இன்று(பிப்.6) அவரது எக்ஸ் தளத்தில்காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது;
"பாஜக தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் ஒருபோதும் இவ்வாறு செய்ததில்லை. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரதமர் மோடி, அவர் வகிக்கும் உயர் பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார்.
மாநிலங்களவையிலும் இன்று(பிப்.6) பிரதமர் மோடி இதேபோல நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை. பெரும் மனக்குழப்பத்தில் பிரதமர் மோடி இருப்பதால், நேரு மீது அரசியல்ரீதியாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்களவையில் பிரதமராக, மோடியின் கடைசி உரை என்ற முடிவுக்கு நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வந்து விட்டனர்"
இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.