ஆன்லைனில் போதை மாத்திரைகள் | அடுத்தடுத்து சிக்கும் மர்ம ஆசாமிகள் | எங்கே நடந்தது?
ஆன்லைனில் ஆர்டர் செய்து இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை...அடுத்தடுத்து சிக்கும் போதை மாத்திரை விற்பனை கும்பல்.. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்......
போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என காவல் துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் தடைகளை மீறி போதை பொருள் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது கடந்த நவம்பர் மாதம் புளியந்தோப்பு பகுதியில் ராகுல் மற்றும் சதீஷ் என்ற இரண்டு இளைஞர்கள் போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல் சென்னையில் போதைக்கு அடிமையானவர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை பல்வேறு விதமாக வாங்கி நீரில் கரைத்து ஊசி மூலமாக உடம்பில் ஏற்றிக்கொண்டு போதைக்கு அடிமையாவதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பலரையும் கைது செய்த போலீசார் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தேகம் அடிப்படையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றி திரிந்த கணேஷ் என்பவரை பிடித்து போலிசார் விசாரணை நடத்திய போது அவரிடம் 50 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் வடசென்னையை சேர்ந்த பிகாம் பட்டதாரியான சீனிவாசன் என்பவரிடம் செல்போனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி போதை மாத்திரைகளை வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைதான சீனிவாசன் ,ஸ்டீபன் என்பவர் மூலமாக ஆன்லைனில் ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகளை கொரியர் மூலமாக வரவழைத்த்து தெரியவந்துள்ளது. இந்த போதை மாத்திரை வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இந்தியா மார்ட் எனப்படும் ஆன்லைன் இணையதளத்தில் மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமலேயே அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி குவித்துள்ளது.
மேலும் போதைத் தரும் வழி நிவாரண மாத்திரைகளை 300 ரூபாய்க்கு வாங்கி 5000 ரூபாய்க்கு மொத்தமாக கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. .
கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஸ்டீபன் ஆகியோரிடம் இருந்து 600 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.அதே போல்
முத்தையால் பேட்டையில் சுல்தான் அலாவுதீன் என்பவரிடம் இருந்து 630 வலி நிவாரணம் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் அடுத்தடுத்து போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலமாகவும், கொரியர் மூலமாகவும், விற்பனை செய்யும் கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.