"நாரா... சந்திர பாபு நாயுடு எனும் நான்..." உணர்ச்சி பொங்க நடந்த பதவியேற்பு விழா!
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவைதொகுதிகளில் 21 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டப்பேரவை மற்றும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபள்ளி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான அரங்கில் இன்று காலை 11:27 மணிக்கு சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மத்திய அமைச்சர்கள், நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்றனர்.
தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு. இவருக்கு வழங்கிய 21 சட்டப்பேரவை தொகுதி மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் தான் உட்பட தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்துள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபுவைத் தொடர்ந்து அடுத்ததாக ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். தொடர்ந்து நாரா லோகேஷ் உள்ளிட்ட 23 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதேபோல பட்டியலில் இடம்பெற்ற சிறுபான்மை சமூகத்தை சார்ந்த நாஸ்யம் முகமது ஃபாரூக்கும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.