காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை!
மகாத்மா காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட் தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக எடுத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
நாமக்கல் அருகே மேற்கு பாலபட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். இவர் செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் முதல் ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரையில், 10 முறை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்கிய நிலையில், காந்தி போல் வேடமணிந்து வந்த ரமேஷ் டெபாசிட் தொகையான ரூ. 25 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பத்து ரூபாய் நாணயங்களை சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அலுவலர்கள் எண்ணினர். 10 ரூபாய் நோட்டு நாணயங்களை வேட்பு மனு தாக்கல் செய்ய கொண்டு வந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.