தந்தை, மகன், மருமகன் இழப்பு... நிர்கதியாய் தவித்த குடும்பம் - ‘நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்’ மூலம் கிடைத்த உதவி!
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவடத்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பம், பனையேறும் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை, மகன் மற்றும் மருமகன் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் இழந்து தவித்து வருகிறது.
இந்தக் குடும்பத்தின் துயரத்தைக் கண்ட நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி, தனது 'அன்பு பாலம்' திட்டம் மூலம் பல்வேறு உதவிகளைத் திரட்டி வழங்கி வந்தது.
இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதி அறக்கட்டளை இந்தக் குடும்பத்திற்கு பெரும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
மேலும் ஜோதி அறக்கட்டளையின் செயலாளர் பிரபுராஜ், பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தை நேரில் சந்தித்து, முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அத்துடன், அந்தக் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, மாதந்தோறும் ரூ. 5,000 வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலும், அந்தக் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் பிரபுராஜ் வழங்கினார்.
மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்து நிர்க்கதியாய் நின்ற இந்தக் குடும்பத்திற்கு, 'நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம்' மூலம் கிடைத்த உதவிக்குப் பிறகு, தற்போது ஜோதி அறக்கட்டளையின் இந்த உதவி, அவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இது போன்ற மனிதாபிமான உதவிகள், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக அமைவது பாராட்டுக்குரியது.