நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான, நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
8 ஆம் நாளான டிச. 1-ல் மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட அருள் பணியாளர்கள் தலைமை வகித்து ஆடம்பரக் கூட்டு திருப்பலி நிறைவேற்றுகின்றனர். கோட்டாறு பங்கு அருள்பணிப் பேரவையினர் சிறப்பிக்கின்றனர். டிச.2 இல் மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 10.30 மணிக்கும், டிச.3இல் இரவு 10 மணிக்கு சவேரியாரின் தேர்பவனி நடைபெறுகிறது.
நிறைவு நாளான டிச.4ஆம் தேதி காலையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். 8 மணிக்கு மலையாளத் திருப்பலி நடைபெறும். இதில், திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட ஆயர் கிளாடின்அலெக்ஸ் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.