நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
நாகாலாந்து மாநில ஆளுநரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான இல.கணேசன், ஆகஸ்ட் 15, 2025 அன்று காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இல.கணேசனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து முதல்வர் நீபியு ரியோ, பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.அங்கு, இல.கணேசனின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு, முப்படை வீரர்களால் 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தினர். இல.கணேசன் மேற்கு வங்காளம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது மறைவுக்குப் பிறகு, நாகாலாந்து அரசு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.