நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!
மதுரை பி.பி.குளம் பகுதியில் நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகரத்தில் தல்லாகுளம் காவல் நிலையம் அருகே உள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு அருகே உள்ள சாலையில் தினமும் காலையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நடைப் பயிற்சிக்கு வருவதுண்டு. அந்த வகையில் நாதக நிர்வாகி பாலசுப்ரமணியனும் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வார்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதியின் துணைச் செயலாளராக இருந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 16) காலை அவர் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, 4 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை பின்தொடர்ந்து சென்று, வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது.
பாலசுப்ரமணியன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சித்தும், 4 பேரும் விடாமல் அவரை விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர். அப்பகுதியில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்த சிலர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பாலசுப்ரமணியன் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவரது தம்பி மகளின் மாமனாரான மகாலிங்கம் என்பவரோடு பிரச்சினை இருந்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மதுரை பி.பி.குளம் பகுதியில் நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.