11ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் - 5 தனிப்படைகள் அமைப்பு !
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தேவேந்திரன் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார்.
அப்போது அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து உள்ளே புகுந்து தேவேந்திரனை பேருந்துக்கு வெளியே இழுத்து சென்றுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக மர்ம கும்பல் வெட்டியுள்ளது. இதில் தேவேந்திரனுக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் மர்ம குமாப்ளா தப்பியோடியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மபநாபபிள்ளை உள்ளிட்ட போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவனின் தனது கூறுகையில், "தனது மகன் ஆங்கில வழியில் 11ம் வகுப்பு படித்து வருவதாகவும், சாதி மோதலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த நிகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.