For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மர்மக் காய்ச்சலை பரிசோதிக்காமல் ‘மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழிக்கின்றனர் - அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு!

03:24 PM Dec 17, 2023 IST | Web Editor
மர்மக் காய்ச்சலை பரிசோதிக்காமல் ‘மழைக்கால காய்ச்சல்  என தட்டிக் கழிக்கின்றனர்   அதிமுக முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் பதிவு
Advertisement

கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், 'மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழிக்கின்றனர் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

“தமிழ்நாடு முழுவதும் கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், 'மழைக்கால காய்ச்சல்' என தட்டிக் கழித்து, கடந்த 1 மாதகாலமாக தொடர்ந்து வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத் துறைக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் துவங்கி முதியவர் வரை பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதாரத் துறை இது என்ன மாதிரியான காய்ச்சல்? எதனால் பரவுகிறது? காய்ச்சலுக்கு பிறகும் மக்களை வாட்டி வதைப்பது ஏன்? மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என எதைப்பற்றியும் கவலைப்படாமல் இவற்றையெல்லாம் மூடி மறைக்கின்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே, H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல், டெங்கு, இன்ப்ளூயன்சா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவிய நிலையில், இப்போது, அண்டை நாடுகளில், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக, தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு பரவி வரக்கூடிய மர்மக் காய்ச்சலை முறையான பரிசோதனை மேற்கொண்டு கண்டறிந்து, அது என்ன மாதிரியான காய்ச்சல் என்பதை மக்களுக்கு விளக்கி, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் மர்மக் காய்ச்சலுக்காக மக்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளை நோக்கி அணி வகுக்கிறார்கள். ஆகவே, போர்க்கால அடிப்படையில் 'சுகாதாரத்துறை செயல்பட வேண்டிய மிக உயரிய நேரமிது!' மக்களை பதட்டமைடைய செய்யாமல்; காய்ச்சலை முறையாக பரிசோதித்து அவர்களின் நலனை காப்பது அரசின் கடமை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement