“எனது மாணவ குடும்பமே...!” - பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை
இளம் தலைமுறையினர் மீது தான் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணாப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களுடன் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
வணக்கம்....எனது மாணவ குடும்பமே... 38-வது பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2024-ம் ஆண்டில் முதல் நிகழ்ச்சியாக இங்கு கலந்து கொள்கிறேன். இளைய தலைமுறைக்கு முன்பாக நிற்கும்போது மகிழ்ச்சி கொள்கிறேன்.
1982-ம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. வலுவான கட்டமைப்புடன் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதனால் தான் மொழி, அறிவியல் என எல்லா விதத்திலும் இந்த பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. நாலாந்தா மற்றும் தக்சஷீலா பல்கலைக்கழகங்கள் இருந்தது போல், காஞ்சிபுரம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் இருந்தது தெரிய வருகிறது. இது போன்ற நல்ல பல்கலைக்கழகத்தில் படித்த உங்களை இந்த சமூகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது.
இதையும் படியுங்கள் : தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து - மர்ம நபரிடம் போலீசார் விசாரணை..!
பொருளாதார வளர்ச்சியில் இன்று இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. அதேபோல் உலகளாவிய அரங்கில் நம் பல்கலைக்கழகங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது. சிறந்த சமூகத்தையும், சிறந்த நாட்டையும் கல்வியின் வாயிலாகத்தான் பெற முடியும்.
2047-ல் மிகப்பெரிய வளர்ச்சியை நாம் எட்ட வேண்டும். இளைய தலைமுறையான உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. ஆசிய விளையாட்டுகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பல இடங்களில் நம் வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று வருகின்றனர்.
மாணவர்கள் கல்வி கற்பதோடு நிற்காமல் சகோரத்துவம், நல்லிணக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.