காங்கிரஸில் இணைகிறாரா ரகுராம் ராஜன்?
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸில் இணையப்போகிறாரா? என்ற கேள்வி குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தினர் விரும்பவில்லை. நான் பலமுறை கூறியும் மக்கள் இன்னும் என்னை நம்பவில்லை. நான் ஒரு கல்வியாளர். நல்ல காரணத்திற்காக நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. எனவே அரசியலில் நுழைவதை விட நான் செய்ய விரும்புவது என்னால் இயன்றவரை வழிகாட்டியாக இருப்பதே. அதைத்தான் நான் முயற்சி செய்கிறேன். நான் அரசாங்கமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தெ வேண்டாம். அரசாங்கக் கொள்கைகள் தடம் புரண்டதாக நான் உணரும் இடத்தில் நான் அரசியல் குறித்து பேசுவேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் காந்திக்கு ரகுராம் ராஜன் அறிவுரை கூறுகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், “அவர் புத்திசாலி மற்றும் தைரியமானவர் என்று அனைவருக்கும் தெரியும். ராகுல் காந்தி குறித்து இதுபோன்ற தகவல்கள் சித்தரிக்கப்படுகின்றன. தனது பாட்டி படுகொலை செய்யப்பட்டதையும், தந்தை வெடிகுண்டு விபத்தில் இறந்ததையும் பார்த்தவர் ராகுல்காந்தி என்று மக்கள் மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ராகுல் காந்தியிடம் எல்லா பதில்களும் தீர்வுகளும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் மிகவும் நியாயமான தலைவர். அவருக்கு வலுவான நம்பிக்கைகள் உள்ளன. யாருக்காவது அந்த நம்பிக்கைகள் உடன்படவில்லை என்றால், அதுகுறித்து ராகுலிடம் விவாதிக்கலாம். அவர் அந்த விவாதத்தில் ஈடுபட எப்போதும் தயாராக இருக்கிறார்”
இவ்வாறு தெரிவித்தார்.