விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது.
வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மா, பலா, வாழை என முக்கனிகள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட கிராமத்தில் விளையும் அனைத்துப் பொருட்களைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் தேரை பக்தி பரவசத்தோடு இழுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். தேரோட்டத்தை தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வடம்பிடித்து தேரிழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது கோவிலின் நான்கு திசைகளிலும் நடைபெறும் அதிர்வேட்டு மற்றும் வாணவேடிக்கை புதுக்கோட்டை மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வாணவேடிக்கையின் சத்தம்விண்ணை பிளந்தது. தொடர்ந்து இன்று நடைபெறும் தீர்த்த நீர் திருவிழா மிகவும் புகழ்பெற்றது எனபதும் குறிப்பிடத்தக்கது.