"பயங்கரவாத செயல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" - #PMModi
பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இன்று (செப். 22) நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "பதற்றமும் பல பிரச்னைகளும் உலகை சூழ்ந்துள்ள நேரத்தில் க்வாட் உச்சி மாநாடு நடக்கிறது. க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம்" என்றார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“க்வாட் உச்சி மாநாட்டின் போது தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய நலனுக்காக க்வாட் தொடர்ந்து எவ்வாறு பணியாற்றும் என்ற விவாதங்கள் பயனுள்ளதாக இருந்தது. சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.”
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.