இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் - ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!
உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் ஒரு பெண் அணிந்திருந்த ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து, அவருடன் வந்த இந்து மதத்தை சேர்ந்த பையனை ஒரு கும்பல் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு ஆண் அந்தப் பெண்ணின் ஹிஜாபை இழுத்து வலுக்கட்டாயமாக கழற்ற முயற்சி செய்வதாக தெரிகிறது. அப்போது சுற்றியிருந்த மற்றவர்கள் அந்த பெண்ணையும் அவருடன் வந்த பையனையும் உடல் ரீதியாகத் தாக்கினர்.
இச்சம்பவத்தின்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அந்த பெண்ணின் பெயர் ஃபர்ஹீன் மற்றும் அவருடன் வந்த பையனின் பெயர் சச்சின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் இருவரும் தனியார் வங்கியில் பணிபுரிபவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இருவரும் கடன் தவணையை வசூலித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, கலபார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கலபரில் வசிக்கும் ஃபர்ஹானாவின் மகள் ஃபர்ஹீன், தனது தாயின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சச்சினுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த கும்பலை கட்டுப்படுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஃபர்ஹீன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து முசாபர்நகர் காவல் அதிகாரி ராஜு குமார் சாவ், “ ஏப்ரல் 12ஆம் தேதி பவன் பகுதியைச் சேர்ந்த ஒரு இந்து ஆண், கலப்பரைச் சேர்ந்த ஒரு இஸ்லாம் பெண் ஆகியோர் தனியார் வங்கியில் பணிபுரிவதால், சுஜ்துவிலிருந்து கடன் தொகையை வசூலித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சில உள்ளூர் மக்கள் அவர்களைத் தடுத்து தாக்கினர்," என்று தெரிவித்துள்ளார். வைரலான வீடியோவில் அதிகமானோர் அடையாளம் காணப்படுவதால், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்