For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது" - இளையராஜா!

09:23 AM May 21, 2024 IST | Web Editor
 மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது    இளையராஜா
Advertisement

மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை ஐஐடி சார்பில்,  இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை
இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9 வது மாநாடு நேற்று ( மே 20 ) முதல்
மே 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இதன் துவக்க விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி இயக்குநர் காமகோடி,  திரிபுரா ஆளுநர் இந்திர சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு வார காலம் நடைபெறும் இம்மாநாட்டில்,  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,  தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் 25 பயிற்சி பட்டறைகள்,  70 கலைகளைச் சார்ந்த கலைஞர்கள் வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ - மாணவிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் மாநாட்டை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.  40-க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.  இதனையடுத்து,  நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில்,  "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌  நாம் இந்தியர் என்று சொல்ல நிறைய பெருமை இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரம்,  பாரம்பரியம், நடனம் என வித விதமாக இருக்கிறது.  தமிழ்நாட்டில் சிவ வாத்தியம் என்பது மிக முக்கியமானது.  தமிழக பாரம்பரிய கலைகளான பொய்க்கால் குதிரை,  மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகியவை இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.  நிகழ்வின் அறிமுக கூட்டத்தின் போது தமிழக கலைகள் சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுந்தது, நிச்சயம் சேர்க்கப்படும் என இயக்குநர் உறுதி அளித்ததை தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சார இசையை நாட்டின் எளிமையான மனிதனுக்கும் கொண்டு சென்றவர்
இளையராஜா.  2047 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது.  காரணம் சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.  ஐஐடி சென்னை ஆராய்ச்சி மையம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்காக இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது" என்று கூறினார்

தொடர்ந்து,  நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா,
"இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள்.  ஒரு சிறிய பையன் இசையை கற்று கொள்ள சென்னை வந்தான்.  அவனுக்கும் அவனின் அண்ணன் பாஸ்கருக்கும்
அவர்களின் அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்தார்கள.

இசையை பற்றி தெரியாது.  கற்று கொள்வதற்காக வந்தான்.  வந்து,  இதுநாள் வரைக்கும் கற்று கொண்டேனா என்றால்,  கற்று கொள்ளவில்லை.  நான் சாதித்து விட்டேன் என்று எல்லாரும் கூறுகிறார்கள்.  ஆனால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.

அன்று கிராமத்தில் இருந்து எப்படி கிளம்பி வந்தேனோ அதே மாதிரி தான் இன்றும் இருப்பதாக உணர்கிறேன்.  இந்த மையத்தில் 200 இளையராஜா வர வேண்டும்.  இசை எனக்கு மூச்சாக மாறி விட்டது.  மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது" என்றார்.

Tags :
Advertisement