Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் 1 வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் - தமிழ்நாடு அரசு!

01:27 PM Mar 26, 2024 IST | Web Editor
Advertisement

முருகன்,  ஜெயக்குமார்,  ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திருச்சி முகாமில் முருகன் தங்கவைக்கப்பட்டுள்ளார். எனவே முருகனின் மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் எனது கணவர் முருகன் இலங்கை குடிமகன் என்பதால் தங்க வைக்கப்பட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்க கோரி இருவரும் விண்ணப்பித்திருந்தோம். நேர்காணலுக்காக ஜனவரி 30-ம் தேதி அழைக்கப்பட்டோம்.

இந்த நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்காததால், முருகன் இலங்கை துணை தூதரகத்தில் ஆஜராக முடியவில்லை. திருச்சி முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கெனவே ஒரு மாதத்தில் 2 பேர் இறந்துள்ளனர்.  எனவே, என்னுடைய கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக, நாங்கள் இருவரும் மகளுடன் சேர்ந்துவாழ விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற,  திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், முருகனின் நேர்காணலுக்காக மார்ச் 13-ல் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும்,  ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்ததால், அவர்களும் மார்ச் 13-ம் தேதி திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதையடுத்து காவல்துறையின் பாதுகாப்பில், முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனிடையே, முருகன், தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக முருகன், தாக்கல் செய்த மனுவில், ‘லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்கப் போவதாகவும், அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டுமானால், அதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, தனக்கு உரிய அடையாள அட்டை வழங்கும்படி, கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தும், அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார்.  இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 26) விசாரணைக்கு வந்த இந்த மனுவில் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கான பாஸ்போர்ட்டை இலங்கை துணை தூதரகம் வழங்கியுள்ளதாகவும்,  மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு நேற்று (மார்ச் 25) கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும்,  அனுமதி கிடைத்தவுடன் ஒரு வாரத்தில் மூவரும் இலங்கை அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  ”இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தனியாக அடையாள அட்டை தேவையில்லை” எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags :
Central GovtCongressJayakumarmadras highcourtmuruganNews7Tamilnews7TamilUpdatesrajiv gandhiRobert PiussanthanSrilankaTN Govt
Advertisement
Next Article