“முர்ஷிதாபாத் கலவரம் திட்டமிடப்பட்டது” - பாஜக மீது மம்தா பானர்ஜி விமர்சனம்!
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்துள்ள சூழலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடக்கும் கலவரங்கள் திட்டமிடப்பட்டவை என கூறி பாஜக வை விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தாவின் தேதாஜி உள் விளையாட்டு அரங்கில் இன்று(ஏப்ரல்.16) நடைபெற்ற கூட்டத்தில் இஸ்லாம் மதத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்பு மம்தா பானர்ஜி பேசியபோது, “எந்தவொரு கொடூரமான சட்டத்தையும்' அனுமதிக்க வேண்டாம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி கண்காணிக்க வேண்டும். நான் எல்லா மதங்களைப் பற்றியும் பேசுகிறேன். காளி கோயிலை புதுப்பிக்கும்போது பாஜக எங்கே போனது? நாம் துர்கா பூஜையைக் கொண்டாடும்போது, இங்கே மக்களைக் கொண்டாட விடுவதில்லை என்று சொல்கிறார்கள். சரஸ்வதி பூஜை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது, இதை நடக்க விடுவதில்லை என்று சொல்கிறார்கள். அனைவரும் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்.
முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரங்கள் தன்னிச்சையானவை அல்ல; அவை திட்டமிடப்பட்டவை. எத்தனை இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. என்பதற்கு மத்திய பதிலளிக்க வேண்டும்? மருந்துகள், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், சில ஊடகங்கள் வங்காளத்திற்கு எதிராக மட்டுமே பேசுகின்றன. நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், என் முன்னால் வந்து சொல்லுங்கள், என் பின்னால் அல்ல. பாஜக பணம் கொடுத்து வரும் சில ஊடக சேனல்கள் வங்காளத்தின் போலி வீடியோக்களைக் காட்டி வங்காளத்தை அவதூறு செய்ய முயன்றனர். அவர்கள் வெட்கப்பட வேண்டும்”
இவ்வாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.