For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம்..!

12:54 PM Jan 25, 2024 IST | Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்   தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம்
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக நேசப்பிரபு கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பல்லடம் மற்றும் சூலூர் பகுதியில் நடைபெறும் குற்றங்களை துணிச்சலாக ஆவணங்கள் மற்றும் காட்சிகளை திரட்டி செய்தியை பதிவு செய்து வந்தவர் நேசப்பிரபு. பல்வேறு செய்திகளின் மூலம் அரசியல் கட்சியினருக்கும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் துணிச்சலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்பதால் பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று மதியம் முதல் காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டை நோட்டமிட்ட காரில் வந்த கும்பல் செய்தியாளர் நேசப்பிரபு குறித்து விசாரித்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் உள்ள பேக்கரி, செல்போன் கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் தன்னை பற்றி மர்மகும்பல் விசாரிப்பதை அறிந்து கொண்ட செய்தியாளர் நேசப்பிரபு இது தொடர்பாக உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகிலுள்ள காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

நான்கு மணி நேரத்திற்கு மேல், தொடர்ச்சியாக தான் சுற்றிவளைக்கப்பட்டதை காவல் துறையிடம் பதிவு செய்தும், காவல்துறை அலட்சியம் காட்டியுள்ளது. இதனிடையே உடனடியாக தன்னைக் காப்பாற்ற வருமாறு காமநாயக்கன்பாளையம் தலைமை காவலர் கண்ணன் என்பருடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது, மர்ம கும்பல் செய்தியாளரை வெட்ட துரத்தியுள்ளது. சுதாரித்துக் கொண்ட நேசபிரபு உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த அலுவலக அறைக்குள் உள்ளே சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். இதனையடுத்து கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த செய்தியாளர் நேசபிரபுவை வெளியே இழுத்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாள் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது.

இதனைப் பார்த்த பங்க் ஊழியர்கள் வருவதைக் கண்ட கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. நேசப்பிரபு 65 இடங்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நேசபிரபுவை மீட்ட பங்க் ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேசப்பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

“செய்தியாளர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே முதல் காரணமாக இருக்கிறது. தன்னை யாரோ மர்ம நபர்கள் பின் தொடர்கிறார்கள் என காவல்துறைக்கு புகார் அளித்த பின் சில மணி நேரத்தில் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் இச்சம்பத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் தாக்குதலை திட்டமிட்டு செய்த வன்முறை கும்பல் மீது குண்டர் தடுப்பு காவலில் உடனடியாக கைது செய்ய தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

தொடர்ச்சியாக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. ஆனால் தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர்கள் விசயத்தில் அலட்சிய போக்கினை செய்து வருவதால் தான் இது போன்ற சம்பங்கள் பெருகி வருகின்றன. தமிழ்நாடு அரசு இந்த சம்பவத்தினை மனதில் கொண்டு தமிழக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்துகிறோம்.

மேலும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளருக்கு உயர்தர சிகிக்சை அளிப்பதுடன் அதற்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். தாக்குதலுக்கான செய்தியாளர் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 5,00,000 (ஐந்து லட்சம்) உடனடியாக வழங்க தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது”

இவ்வாறு அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement