Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

07:36 AM Jan 25, 2024 IST | Jeni
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. மக்களின் அடிப்படை பிரச்னைகள் உள்ளிட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஆக்கப்பூர்வ செய்திகளை வெளிப்படுத்துவதில் துடிப்புடன் செயல்பட்டு வருபவர்.

நேற்று முழுவதும் வழக்கம்போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நேசபிரபுவை, கார் மற்றும் பைக்கில் வந்த மர்மநபர்கள் பின் தொடர்ந்து நோட்டம் விட்டுள்ளனர். மேலும் அவர் குறித்து, அவரது உறவினர்களிடமே விசாரித்தும் சென்றுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் நேசபிரபு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உள்ளூர் காவல்நிலையமான காமன்நாயக்கன்பாளையம் போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேசபிரபுவை தொடர்பு கொண்ட காமன்நாயக்கன்பாளையம் போலீசார் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.

அடுத்தடுத்து மர்ம நபர்கள் நேசபிரபுவை பின் தொடர, 4 மணிநேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு கேட்டு காவல்துறையினரிடம் நேசபிரபு கோரிக்கை வைத்தும், அதனை அலட்சியமாக கையாண்ட காவல்துறையினர், நேரில் வந்து புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துகொண்ட நேசபிரபு இரவு 9 மணியளவில் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அங்கும் சிலர் இவரை நோட்டம் விட்டு பின்தொடர, காவல்துறையினருக்கு வந்தவர்களின் வாகனங்கள் உள்ளிட்ட விவரங்களை விவரமாக எடுத்துக் கூறி பாதுகாப்பு கேட்டு நேசபிரபு கெஞ்சியுள்ளார். அப்படி காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சுமார் 5 வாகனங்களில் வந்த மர்மகும்பல் நேசபிரபுவை சுற்றி வளைத்தது.

 

ஒரு கட்டத்தில் நேசபிரபுவை மர்ம கும்பல் நெருங்கியபோது, அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குள் ஓடியுள்ளார். இருப்பினும் அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது. இதில் நேசபிரபுவுக்கு இடது கை பலத்த சேதம் அடைந்தது. மேலும் கால், மார்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்ந்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நேசபிரபுவை மீட்டு பல்லடம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

செய்தியாளர் தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நேசபிரபுவை தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும், தனக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது என்றும் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், அலட்சியப் போக்கு காட்டிய காவல்துறை அதிகாரிகளை விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து தண்டனை தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எஸ்.ஆர்.சேகர், நேசபிரபு விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்தோடு பழையபடி பணிக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags :
AttackBJPcondemnjournalistNesaPrabhuReporterTNPolice
Advertisement
Next Article