ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கு - நாளை மறுநாள் தண்டனை அறிவிப்பு!
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் விசாரணையில் அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து, தனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் காதலர் ஷரோன் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதையடுத்து கிரிஷ்மா மற்றும் அவரது தாய் பிந்து, தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கிரிஷ்மாவின் தாயாரும், தாய்மாமனுக்கும் ஜாமீன் கிடைத்த நிலையில், கிரிஷ்மா ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இதையடுத்து நேற்று இவ்வழக்கில் 95 சாட்சியங்கள் விசாரித்த பிறகு கிரிஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளி என நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு விசாரணையில், குற்றவாளியான கிரிஷ்மாக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதாடினர். அதே நேரத்தில் கிரிஷ்மா தரப்பில் அவரது வயதையும் அவர் அம்மா வயதையும் கருத்தில் கொண்டு தண்டனையை குறைக்க வாதாடப்பட்டது. இதைக்கேட்டறிந்த நீதிபதி நாளை மறுநாள் (ஜனவரி 20) தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.