தங்கம், வெள்ளி சீர்வரிசையுடன் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முகேஷ் அம்பானி!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இணையருக்கான திருமண கொண்டாட்டத்தின் ஆரம்பமாக மகாராஷ்டிரா பால்கர் பகுதியை சேர்ந்த 50 மணமக்களுக்கு அம்பானி குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்தனர்.
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் விரேன் மெர்ச்சென்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கொண்டாட்டத்தின் போது, ஜாம் நகரில் உள்ள அனைவருக்கும் விருந்துகள் பரிமாறப்பட்டது. ரிலையன்ஸ் குழுமத்தலைவர் அம்பானியே அவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார். மேலும் அந்த விழாவில் உலக புகழ்பெற்ற பாடகி ரிஹானா, மேஜிக் கலைஞர் டேவிட் பிளேனும் பொழுது போக்கு நிகழ்ச்சி, இந்திய பாடகர்கள் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் தோசன்ஜ் ஆகியோரின் பாடல் நிகழ்ச்சியுடன் திரை பிரபலங்களான ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோரும் நடனமாடினர்.
அந்த கொண்டாட்டத்தின்போது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா, மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், டிஸ்னி சிஇஓ பாப் இகர், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங்க், அட்னாக் சிஇஓ சுல்தான் அகமது அல் ஜாபர் மற்றும் எல் ரோத்ஸ்சைல்ட் தலைவர் லின் ஃபாரெஸ்டர் டி ரோத்ஸ்சைல்ட், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவான்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, மே 29 முதல் ஜூன் 1-ம் தேதி வரை முக்கிய விருந்தினர்களுடன் ரோம் முதல் கேன்ஸ் வரை கப்பலில் சுற்றுலா சென்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 29-ம் தேதி, அம்பானி குடும்பத்தினர் மும்பையில் உள்ள அவர்களின் ஆடம்பர இல்லமான ஆண்டிலியாவில் ஆடம்பரமான விருந்து அளித்தனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, ஆண்டிலியா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி திருமணம் செய்து வைத்துள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Mukesh Ambani and his family organised the mass wedding with over 50 couples
‘A man of the culture’ (itna paisa hai to Internet rates kyu badha rahe ho😭) pic.twitter.com/W3UpO62SPS
— Fenil Kothari (@fenilkothari) July 2, 2024
மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.