உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Chandrachud பெயரில் ரூ.500 கேட்ட MSG - இணையத்தில் வைரல்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் ஆன்லைனில் கணக்கு தொடங்கி, ரூ.500 கேட்டதாக இணையத்தில் ஆதாரங்களுடன் பயனர் ஒருவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன இணைய யுகத்தில், மோசடிகள் என்பது பொதுவான விஷயமாகிவிட்டது. எச்சரிக்கையாக இல்லையெனில், ஆன்லைன் வங்கி மோசடிகள் முதல் தனிநபர்கள் தங்கள் நலனுக்காக மக்களை முட்டாளாக்க செய்யும் மோசடி வரை நாம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற இணைய மோசடிகளில் இருந்து வெளிப்படையான தன்மை காரணமாக மக்கள் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்க முடிகிறது.
அந்த வகையில், ட்விட்டர் (எக்ஸ்) பயனரான கைலாஷ் மேக்வால் தனக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் என்ற பெயரில் இருந்து பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்ததாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவுடன், தான் பெற்ற குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், மோசடி நபர் தன்னை தலைமை நீதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் அவசரக் கூட்டதிற்கு சென்றுகொண்டிருப்பதாகவும், ஆனால் டெல்லியின் கனாட் பிளேஸில் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வாடகை வாகனத்திற்காக ரூ.500 தேவை என்றும், நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு பணத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்துள்ளார் அந்த மோசடி நபர். மேலும் முடிவில், உரையை உண்மையானதாக மாற்ற, "ஐபாடில் இருந்து அனுப்புகிறேன்” என மோசடி நபர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு பகிரப்பட்டதில் இருந்து, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பலரும் இந்த பதிவில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், “அவர் காட்டிய நம்பிக்கைக்கு ரூ.1,000 அனுப்புங்கள்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், "இது ஒரு மோசடி என்று நான் கூறியிருப்பேன். ஆனால் அவர் அதை iPad இல் இருந்து அனுப்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். எனவே கண்டிப்பாக இது சட்டபூர்வமானது” என கேலியாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர், "அவரது கோரிக்கையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து, தீர்ப்பளிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சை அமைக்கவும்" என்று கிண்டல் செய்துள்ளார்.