விமான பயணிகளுக்கு #MPox பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!
சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை கண்காணிப்பு பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொற்று நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும், குரங்கம்மை தொற்று நோயை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் குரங்கம்மை தொற்று நோய் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறியுடன் வருவோர்களை தனிமைப்படுத்தி பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும என வழிகாட்டப்பட்டுள்ளது.
கடந்த 21 நாட்களுக்குள் 116 பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பயணம் செய்து திரும்பிய எந்த வயதினராக இருந்தாலும் அவருக்கு மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாநகர சுகாதார அலுவலர் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் குரங்கம்மை நோய்தடுப்பு கண்காணிப்பு பணியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.