ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து படகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீட்டார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதுமட்டுமல்லாது, 3 நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் கிடைக்காமல் தவிப்பதாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் மத்திய குழு இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. தொடர்ந்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் ஆய்வு செய்ய உள்ளார். இந்நிலையில், தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டார். மேலும், வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.