’பிரதமர் மோடியை சந்தித்தார் எம்.பி கமல்ஹாசன்’- கீழடி தொடர்பாக வலியுறுத்தல்!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, ஜூன் மாதம் 19ம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 25ல் மாநிலங்களவையில் எம்பியாக தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன்.
அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.