டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை - தாய் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள்(21). இவரும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணமாகி திண்டுக்கல் பகுதியிலேயே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெனிட்டா ஜெய அன்னாள் 42 நாட்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
இதன் காரணமாக பெனிட்டா ஜெய அன்னாளை அவரது பெற்றோர் தங்களுடன் சேர்த்து கொண்டுள்ளனர். இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்திக், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்ற போது குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது.
உடனே குழந்தையை பாலூரில் உள்ள தனி யார் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை இறந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளச்சல் ஏஎஸ்பி பெனிட்டா ஜெய அன்னாளிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பெனிட்டா ஜெய அன்னாள் கூறுகையில், "குழந்தை பிறந்ததில் இருந்து எனக்கும், என் கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அவர் அன்பை குழந்தையிடம் மட்டுமே காட்டினார். என்னிடம் பாசம் காட்டவில்லை. குழந்தையால் தானே கணவர் என்மீது பாசம் காட்ட வில்லை என்ற கோபத்தில் டிஷ்யூ பேப்பரை குழந்தையின் வாயில் திணித்தேன். இதனால் குழந்தை இறந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாளை போலீசார் கைது செய்தனர்.