மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு!
மக்களவைத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள் : வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் - தொடரும் சிக்கல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தன. அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதே போல், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர.எம்.வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளன.